படித்ததில் பிடித்தது !!!!
ஒரு ஊரில் செல்வந்தர் ஒருவர் இருந்தார். அவர் தம் வண்டிக்காரனை அழைத்து,
நாளை காலை நாம் பக்கத்து ஊருக்கு ஒரு திருமணத்துக்குச் செல்லவேண்டும். திருமணம் காலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. அதனால் இரவு 3 மணிக்குக் கிளம்பினால் தான் போகமுடியும். நீ இரவு தூங்கிவிடாமல் எழுந்து வண்டியில் மாட்டைக் கட்டிவிட்டு என்னை எழுப்பிவிடு என்று சொன்னார்.
வண்டிக்காரனும் சரி என்றான்.
பின் அந்த செல்வந்தர் அந்த வண்டிக்காரனிடம். ஆமாம் எந்த மாடுகளை வண்டியில் பூட்ட இருக்கிறாய்? என்றார்.
நேற்று அந்த செக்குக்காரரிடம் வாங்கினோமே இருமாடுகள். அவற்றைத்தான் ஐயா என்றான் அந்த வேலைக்காரன்.
இவரும் சரிப்பா மறந்துடாதே.. தூங்கிவிடாதே என்று எச்சரித்துவிட்டுத் தூங்கச் சென்றுவிட்டார்.
இவனும் சரியான நேரத்துக்கு எழுந்து மாடுகளைப் பூட்டிவிட்டு மெத்தைகளெல்லாம் போட்டுவிட்டு செல்வந்தரை சரியாக 2.45 மணிக்கு எழுப்பினான்.
நல்ல தூக்கத்திலிருந்த அவரும் பாதிக்கண்களைத் திறந்துகொண்டு வந்து மீதித் தூக்கத்தை மாட்டுவண்டியிலேயே தொடர்ந்தார்.
வண்டிக்காரனுக்கும் தூக்கம் கண்களைத் தழுவியது. இருந்தாலும் சமாளித்துக்கொண்டே வந்தான். மாட்டுவண்டி இவர்கள் செல்லவுள்ள முதன்மைச் சாலைக்கு வந்ததும் இவனும் இந்தச்சாலை நேராக அந்த ஊருக்குத் தானே செல்கிறது. நாம் ஏன் விழித்துக்கொண்டே வரவேண்டும். மாடுகள் ஓடும் மணியோசை காதுகளில் கேட்டுக்கொண்டே தானே வருகிறது. மாடுகளின் மணியோசை நின்றால் மட்டும் நாம் விழித்துப்பார்த்தால் போதாதா? என்று தோன்றியது. அதனால் மாட்டுக்காரனும் வண்டியில் அமர்ந்த நிலையிலேயே நன்றாகத் தூங்கிவிட்டான்.
சிறிதுதூரம் சரியான வழியில் சென்ற மாடுகள், முன்பு தாம் இருந்த செக்குக்காரர் வீட்டுக்குச் செல்லும் வழிகளைக் கண்டதும் வளைந்து அங்கே சென்றுவிட்டன. சென்ற மாடுகள் இத்தனை ஆண்டுகாலமாகத் தாம் சுற்றிக்கொண்டிருந்த செக்குகளைப் பார்த்ததும். பழைய நினைவுவந்து அந்த செக்கையே விடியவிடிய சுற்றிக்கொண்டிருந்தன.
மாடுகளுக்கு நினைவு நாம் செக்கைத்தான் சுற்றிக்கொண்டிருக்கிறோம் என்று,
வண்டிக்காரனுக்கு நினைவு நம் மாடுகள் விரைவாகவும், சரியான பாதையிலும்தான் சென்றுகொண்டிருக்கின்றன என்று,
செல்வந்தருக்கு நினைவு நாம் திருமணத்துக்கு உரிய நேரத்தில் சென்றுவிடுவோம் என்று..
பொழுதும் விடிந்தது...
வண்டிக்காரனும், செல்வந்தரும் இன்னும் தூங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள்..
வண்டிமாடுகளும் செக்கைச் சுற்றிக்கொண்டேதான் இருக்கின்றன.
மணியோசையும் கேட்டுக்கொண்டே தான் இருக்கிறது.
அந்தச் செக்குக்காரர் வந்து இந்தக் காட்சியைப் பார்த்து சிரியோ சிரியென்று சிரித்தார். பின் அருகே சென்று அந்த வண்டிமாடுகளை நிறுத்திவிட்டு அந்த செல்வந்தரை எழுப்பி என்னங்க நேற்று ஏதோ திருமணத்துக்குப் பக்கத்து ஊருக்குப் போறேன் என்று சொன்னீங்க. இங்கு வந்து சுற்றிக்கொண்டிருக்கிறீங்க? என்று கேட்டார்.
நொந்துபோன செல்வந்தார் அந்தவண்டிக்காரனை வேலையைவிட்டு நீக்கிவிட்டார்.
என்றொரு கிராமியக் கதை உண்டு
இந்தக் கதையை அப்படியே இன்றைய கல்விநிலையோடு ஒப்பிட்டுப் பாருங்களேன்..
செல்வந்தர் - பெற்றோர்
வண்டிக்காரன்- கல்விநிறுவனங்கள், ஆசிரியர்கள்
மாடு - மாணவர்கள்
இன்றைய பெற்றோர்கள், தம் பிள்ளைகளை நல்ல கல்வி நிறுவனங்களில் சேர்ப்பதோடு தம்கடமை முடிந்துவிட்டது என நினைக்கிறார்கள்..
கல்விநிறுவனங்கள் இம்மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்களோடு பட்டச்சான்றிதழ் கொடுத்தால் போதும் என நினைக்கிறார்கள்
மாணவர்கள், எல்லோரையும் போல நாமும் தேர்ச்சியடைந்து வேலைகிடைத்தால் போதும் என நினைக்கிறார்கள்...
அந்த செல்வந்தரோ, வண்டிக்காரனோ, மாடுகளோ தாம் செல்லும் வழி சரிதானா என இடையில் ஒருமுறையாவது விழித்துப்பார்த்திருந்தால் அவர்கள் சரியான நேரத்துக்குத் சரியான இடத்துக்குச் சென்றிருப்பார்கள்.
அதுபோல..
இன்றைய மாணவர்கள்....
கல்விச்சாலை செல்கிறார்கள்..
படிக்கிறார்கள்..
பட்டம் பெறுகிறார்கள்..
வேலைக்குச் செல்கிறார்கள்...
இவையெல்லாம இவர்கள் விரும்பித்தான் செய்கிறார்களா?
என எத்தனை பெற்றோர்கள் தம் பிள்ளைகளிடம் கேட்கிறார்கள்?
மதிப்பெண்ணுக்கு மேல் ஒரு மாணவனை எப்படி மதிப்புக்குரிய மனிதனாக உருவாக்கவேண்டும் என எத்தனை கல்விநிறுவனங்கள் சிந்திக்கின்றன?
பெற்றோர் படிக்கவைக்கிறார்கள், கல்வி நிறுவனங்கள் சொல்லித்தருகிறார்கள் நம் கடமை படிப்பது என்று மட்டுமே சிந்திக்கும் மாணவர்களில் எத்தனை பேரின் உழைப்பு அவர்களின் குடும்பத்தைக் கடந்து சமூகத்துக்குப் பயன்படுகிறது?
என இந்தக் கதையோடு இன்றைய கல்வியின் பல்வேறு முகங்களையும் ஒப்பிட்டு நோக்கமுடிகிறது.
செக்குமாடும் உழைக்கிறது.. ஆனால் அதன் உழைப்பு பயன்படுகிறதா?
மாணவர்களும் நன்றாகத்தான் படிக்கிறார்கள்! ஆனால்.. அவர்களின் உழைப்பு அவர்களின் குடும்பத்தைக் கடந்து சமூகத்துக்குப் பயன்படுகிறதா?
- முனைவர்.இரா.குணசீலன்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.