சாஃப்ட்வேர்க்காரன் சம்பளம்:
சாஃப்ட்வேரில் வேலை செய்தால் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குவார்கள் என்று இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது. 'அதெல்லாம் அந்தக்காலம் பாஸ்' என்று சொன்னாலும் இவர்கள் நம்புவதில்லை.
மென்பொருள் துறையில் ஐந்தாயிரம் ரூபாய்க்கு முதல் வேலையில் சேர்பவர்கள் இருக்கிறார்கள். மூன்று வருடம் கழித்து பதினைந்திலிருந்து இருபதாயிரம் ரூபாய் சம்பளமாக வாங்குபவர்கள் கணிசமாக உண்டு. ஒருவேளை இரண்டாயிரத்துக்கு முன்பாக வேலைக்குச் சேர்ந்தவர்கள் லட்சங்களில் வாங்கிக் கொண்டிருக்கக் கூடும். ஆனால் இரண்டாயிரத்துக்கு பிறகு வேலைக்குச் சேர்ந்துவர்கள் பெரும்பாலானோருக்கு அது ஒரு கனவுதான்.
முன்பெல்லாம் ஒரு கம்பெனியிலிருந்து இன்னொரு கம்பெனிக்கு ‘ஜம்ப்’ அடித்தால் வாங்கிக் கொண்டிருக்கும் சம்பளத்தை விட இரண்டு மடங்கு வரை வாங்கலாம். ஆனால் இப்பொழுதெல்லாம் கம்பெனிகள் உஷாராகிவிட்டன. ‘இத்தனை வருட அனுபவத்திற்கு இவ்வளவுதான் தர முடியும்’ என்று தெளிவாக இருக்கிறார்கள். சந்தையில் கூட கத்திரிக்காயை ஐந்து ரூபாய் குறைத்து வாங்கிவிடலாம். ஆனால் இந்த HR பெருமக்கள் இருக்கிறார்களே- டூ மச். அவர்கள் அறிவிக்கும் தொகையிலிருந்து வருடத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் கூடுதலாகக் கொடுங்கள் என்று கேட்க வேண்டுமென்றாலும் கூட மென்று தண்ணீர் குடிக்க வேண்டும். அப்படியே தண்ணீர் குடித்தாலும் வெற்றி கிடைக்கும் என்று சொல்ல முடியாது. “வந்தா வா; வராட்டி போ” என்று சொல்லிவிடுகிறார்கள். அவர்களுக்குத் தேவை வெட்டுவதற்கு தோதான நல்ல ஆட்டுக்குட்டி. இந்த ஆட்டுக்குட்டி இல்லாவிட்டால் இன்னொரு ஆட்டுக்குட்டி. சந்தையில் ஆட்டுக்குட்டிக்களுக்கா பஞ்சம்? அதுதான் வீதிக்கு வீதி இஞ்சினியரிங், எம்.சி.ஏ பண்ணை ஆரம்பித்து ஒவ்வொரு வருஷமும் ‘வதவத’வென குட்டிகளை வெளியில் அனுப்பிக் கொண்டிருக்கிறார்களே! இன்றைய சூழலில் பில்கேட்சு இண்டர்வியூவுக்கு வந்தாலும் இதுதான் நிலவரம்.
ஒரே கம்பெனியில் இருந்தால் நிலைமை இன்னும் மோசம். வருடத்திற்கு இரண்டு சதவீதம்தான் சம்பள உயர்வு தருகிறார்கள். “இஷ்டம்ன்னா இரு; கஷ்டம்ன்னா கிளம்பு” என்பதெல்லாம் இப்பொழுது சர்வசாதாரணம் ஆகிவிட்டது.
சரி எவ்வளவுதான் சம்பளம் வாங்குகிறோம்? பத்தாயிரம்? இருபதாயிரம்? நாற்பதாயிரம்? சரி அவர்களின் ஆசையை ஏன் கெடுப்பானேன். சராசரியாக மாதம் ஐம்பதாயிரம் வாங்குவதாக வைத்துக் கொள்ளலாம். வரவை மட்டும் பார்த்தால் எப்படி? எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதையும் பார்த்துவிட வேண்டுமல்லவா?
ஐ.டி கம்பெனிகள் என்ன கரட்டடிபாளையத்திலும், வள்ளியாம்பாளையத்திலுமா இருக்கின்றன? பெங்களூரிலும் சென்னையிலும் இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டை பன்னிரெண்டாயிரத்துக்கு குறைவாக வாடகைக்கு பிடிக்க முடிவதில்லை- அதுவும் கூட ஊருக்கு ஒதுக்குப் புறமாகத்தான் இந்த வாடகையில் கிடைக்கும். கணவன் மனைவி இரண்டு பேரும் வேலைக்குச் சென்றால் பரவாயில்லை. ஒருவர் மட்டும் வேலை செய்தால் ஐந்தில் ஒரு பங்கு வாடகையிலேயே போய்விடுகிறது. சரி இரண்டு பேர் வேலைக்கு போவதாகவே வைத்துக் கொள்வோம். மாதம் ஆறாயிரம் ரூபாய் வாடகையில் காலி.
ஊருக்கு ஒதுக்குப் புறமாக வீடு பிடித்தாகிவிட்டது. தினமும் அலுவலகத்திற்கு போய் வர வேண்டுமல்லவா? பெட்ரோல் விற்கும் விலைக்கு வாரம் ஐந்நூறு ரூபாய்க்காவது செலவு வந்துவிடுகிறது. ஆக இரண்டாயிரம் ரூபாய் ஸ்வாஹா. அலுவலகம் முடித்து வீட்டிற்கு போனால் சும்மா இருக்க முடியுமா? அலுவலக வேலை, ஃபேஸ்புக், ஜிமெயிலு என்று இணையத்திற்கு குறைந்தபட்சம் மாதம் இரண்டாயிரம் ரூபாய் செலவாகிவிடுகிறது. ஆக ஐம்பதாயிரத்தில் இந்த மூன்று செலவுகளுக்கு மட்டும் பத்தாயிரம் கழண்டாகிவிட்டது.
கல்யாணம் ஆகாமல் இருந்தால் கொஞ்ச நஞ்சம் மிச்சம் பிடிக்கலாம். ஒருவேளை திருமணம் முடித்து பள்ளியில் படிக்கும் வயதில் குழந்தை இருந்தால் சோலி சுத்தம். எவ்வளவுதான் சுமாரான பள்ளியாக இருந்தாலும் பெங்களூரில் குறைந்தபட்ச ஃபீஸ் அறுபதாயிரம் ரூபாய். அது போக பள்ளி வாகனம், புத்தகம், ட்யூஷன், ஃபீல்ட் ட்ரிப் என செலவை ‘ரவுண்ட்’ செய்துவிடுகிறார்கள். ஆக மாதம் குழந்தையின் படிப்புக்கென மாதம் ஏழாயிரம் ரூபாயை ஒதுக்கி வைத்துக் கொள்ளலாம்.
இது போக பெரும்பாலான கம்பெனிகளில் திங்கள், செவ்வாய் ‘ஃபார்மல் ட்ரஸ்’, புதன், வியாழன் ‘செமி ஃபார்மல்’, வெள்ளியன்று ‘கேசுவல்’ என்ற நடைமுறை உண்டு. வான் ஹூசனிலும், பீட்டர் இங்க்லாண்டிலும் இரண்டாயிரம் ரூபாய்க்கு குறைவில்லாமல் சட்டை எடுக்க முடிகிறதா? அதுவும் டீம் பாலைவனமாக இருந்துவிட்டால் பரவாயில்லை. ஒன்றிரண்டு ஃபிகர்கள் இருந்துவிட்டால் அவர்களுக்கு வேண்டியாவது மாதம் ஒரு செட் துணி எடுக்க வேண்டியிருக்கும். ஆக இதுக்கு சராசரியாக மாதம் ஒரு ஐந்திலிருந்து நான்காயிரம் வரை.
இதுவரைக்கும் கணக்கு போட்டு பார்த்தீர்களா? பாதிச்சம்பளம் முடிந்துவிட்டது.
இது தவிர கேஸ் சிலிண்டர், ஃபோன் பில், காய்கறி வாங்க, கறி எடுக்க, அரிசி வாங்க, பருப்பு வாங்க, பையனை ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் கூட்டிப்போக, அவ்வப்போது மருத்துவச் செலவு, (குறைந்தபட்ச டாக்டர் கன்சல்டிங் ஃபீஸ் முந்நூறு ரூபாய்) ம்ஹூம்! என்னதான் கஞ்சத்தனமாக இருந்தாலும் - இப்படியெல்லாம் சேர்த்து ஐந்தாயிரம் ரூபாயாவது தீர்ந்துவிடுகிறது.
அப்புறம் மாதம் ஒரு முறை ஊருக்கு போய்வர குறைந்தபட்சம் மூன்றாயிரம்(ஒரு ஆளுக்கு ஒருவழி டிக்கெட் ஐந்நூறு ரூபாயாவது ஆகிறது), அம்மா அப்பாவுக்கு செலவுக்கு கொடுக்க பத்தாயிரம்.
இந்தச் செலவை எல்லாம் செய்து முடித்தாலும் சம்பளப் பணத்தில் பத்தாயிரம் ரூபாய் மிச்சமிருக்கிறது அல்லவா? அதுக்கு வினை வைக்கத்தான் கிரெடிட் கார்ட், பெர்சனல் லோன் EMI என்று ஏதாவது வந்து சேர்ந்துவிடுகிறது. அப்படியும் மிச்சமாகும் பத்து ஐம்பதுக்கும் நம் ஆட்கள் செலவு வைத்துவிடுகிறார்கள். வாரம் ஒரு முறை அல்லது இரண்டு வாரத்திற்கு ஒரு முறை ‘டீம் லன்ச்’க்கு அழைத்துப் போகிறார்கள். எல்லோரும் பகிர்ந்து கொள்வதாக இருந்தாலும் ஆளுக்கு ஐந்நூறு ரூபாய் தண்டம் உண்டு. ஏமாந்து ‘நீதான் மாப்ளே ட்ரீட் தரணும்’ என்று நம் தலையில் கட்டிவிட்டார்கள் என்றால் ‘ஒண்ணாம்தேதி திருப்பித் தந்துவிடுகிறேன்’ என்று யாரிடமாவது கடன் வாங்கினால்தான் முடியும்.
இத்தனையும் போக கே.எஃப்சி, பீட்ஸா கார்னர் என்று வாயைத் திறந்து கொண்டிருக்கும் பூதங்களுக்கு கிள்ளியும் அள்ளியும் போட வேண்டியிருக்கிறது. ஒருவேளை ப்ரோமோஷன் கிடைத்து சம்பளம் லட்ச ரூபாயைத் தொட்டாலும் எதுவும் மிச்சம் ஆகாது. கார் வாங்கி அதற்கு EMI, பெட்ரோல், ஒருவேளை டிரைவர் வைத்தால் அவர் சம்பளம் பன்னிரெண்டாயிரம் ரூபாய்.
சென்னையிலும் பெங்களூரிலும் மற்றவர்கள் எல்லாம் வாழ்வதில்லையா என்று யாராவது குரல் உயர்த்தக் கூடும். அரசு ஊழியர்களுக்கும், பத்திரிக்கை நண்பர்களுக்கும், கல்லூரி பேராசிரியர்களுக்கும் சம்பளம் எந்தவிதத்திலும் குறைவில்லை. இப்பொழுதெல்லாம் அரசாங்க ஊழியர்களின் சம்பளமே நாற்பது ஐம்பதைத் தொடுகிறது. அவர்களுக்கு சம்பளமா முக்கியம்? கிம்பளம்தானே மெயின் மேட்டர். சேனல்களில் எழுபதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குபவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். கல்லூரி பேராசிரியர்கள் சர்வசாதாரணமாக ஐம்பதுகளைத் தொடுகிறார்கள். ஐடிக்காரன் மட்டும் என்ன பாவம் செய்தான்?
ஆச்சு பார்த்தீர்களா? இதுதான் எங்களின் வரவும் செலவும். ‘வாங்குறதுக்கும் திங்கிறதுக்கும்தான் சரியாக இருக்கிறது’ இதையெல்லாம் புலம்பல் என்று எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. ‘ஓவராக படம் ஓட்டுகிறான்’ என்றும் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. எந்த ஐடிக்காரனிடம் வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள். ஒத்துக் கொள்வார்கள். இதுதான் ரியாலிட்டி. இனி யாராவது சாஃப்ட்வேர்க்காரனுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் வருகிறது என்று சொல்வதாக இருந்தால் முகவரி கொடுத்துவிட்டுச் சொல்லுங்கள். அந்த மாத வரவு செலவு பட்டியலை அனுப்பி வைக்கிறோம். எங்களுக்கு துண்டு விழும் பட்ஜெட்டை செட்டில் செய்துவிட்டு என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள்.
Source:
http://www.nisaptham.com/2013/07/blog-post_18.html